மூன்று, நான்கு பாலங்கள் இருக்க வேண்டும், மகாதிர் கூறுகிறார்

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலானப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மூன்று அல்லது நான்கு பாலங்கள் தேவை என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

“ஆரம்பத்தில், குறைந்த எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களைக் கொண்டிருக்கும் பினாங்கு, அதன் முதல் பால நிர்மாணிப்பை எதிர்த்த போதிலும், தற்போது மூன்றாவது சுரங்கவழி பாலத்தை நிர்மாணிப்பதில் இறங்கிவிட்டது.

“சிங்கப்பூருக்கான போக்குவரத்து பினாங்கை விட மிக பெரியது, நம்மிடம் ஒரே ஒரு மேம்பாலமும் ஒரு பாலமும் மட்டுமே உள்ளது. நமக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு பாலங்கள் தேவை,” என்று அவர் கோலாலம்பூரில், ‘2019 மலேசிய முதலீடுகள்’ எனும் நிகழ்ச்சியின் கேள்வி-பதில் அங்கத்தின் போது கூறினார்.

சிங்கப்பூர் சில காரணங்களுக்காக, புதிய பாலங்கள் கட்டப்படுவதை விரும்பவில்லை என்றும், அது ஏன் என தனக்குப் புரியவில்லை என்றும் மகாதிர் தெரிவித்தார்.

தண்ணீர் ஒப்பந்தங்களில், இரு நாடுகளும் சண்டையிட்டு கொள்வதில்லை என்று டாக்டர் மகாதீர் உறுதியளித்தார்.

 

“நாம் நல்லவர்கள் … நாகரீகமான முறையில், பேச்சுவார்த்தை நடத்த நாம் முயற்சிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பரப்பு, போர்க் கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் திறந்துவிடப்பட வேண்டும் எனும் தனது நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதேசமயம், எந்தவொரு போர்க் கப்பலும், எந்தவொரு நீர்ப்பரப்பிலும் நிரந்தரமாக நங்கூரமிட அனுமதிக்கக் கூடாது, அது சுற்றியுள்ள நாடுகளுக்கு ஆத்திரமூட்டுவதாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

-பெர்னாமா