இசிஆர்எல் செலவு குறித்து பிஎன்னிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்: எதிர்கட்சியைச் சாடினார் மகாதிர்

கிழக்குக் கரை ரயில் இணைப்பு(இசிஆர்எல்)க்கான  அதிகப்படியான செலவு குறித்து கேள்வி எழுப்பும் எதிரணி, பிஎன் அரசாங்கம் சீனாவுடன் அதற்கான ஏறுமாறான ஒப்பந்தம் செய்து கொண்டபோது அல்லவா அதைக் கேட்டிருக்க வேண்டும்.

இப்போது “காலம் கடந்து” கேட்கிறார்கள் எனக் கூறிய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , அதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டு விட்டது என்றார். ஒப்பந்தத்தை மீற முடியாது என்பதால் அந்த ரிம81பில்லியன் ஒப்பந்தம்மீது அரசாங்கம் இப்போது சீன நிறுவனத்துடன் மறுபேச்சுகளை நடத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

“அது தொடர்பாகக் கேள்வி எழுப்பியவர்களைப் பாராட்டுகிறேன்.

“அவர்களிடம் கேட்கிறேன், இந்தக் கேள்வியை முன்பு, ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது கேட்காதது ஏன்?”.
மகாதிர், இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரியின் கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு வினவினார்.

“ஆலோசனை கேட்பதற்கு எவ்வளவு செலவானது, நிலத்தைக் கையகப்படுத்த எவ்வளவு செலவானது என்றெல்லாம் அப்போது கேட்காதது ஏன்? இப்போது காலம் கடந்து விட்டது. அத்திட்டம் தொடங்கப்பட்டு விட்டது”, என்றவர் சொன்னார்.

இஸ்மாயில், அத்திட்டம் கடந்த ஆண்டு ஜூலையில் நிறுத்திவைக்கப்பட்டதுவரை ஆன செலவு பற்றியும் அதன் பின்னர் செய்யப்பட்ட செலவுகள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினார்..

இசிஆர்எல் மீதான பேச்சுகள் சீனாவுடன் தொடர்ந்து நடப்பதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின் அரசாங்கத்தின் சிறப்புத் தூதராக பேச்சுகளை நடத்தி வருகிறார் என்றும் மகாதிர் கூறினார்.