எம்ஏஎஸ் விற்கப்படுமா?

தட்டுத்தடுமாறி நடைபோடும் மலேசிய விமான நிறுவனத்தை வாங்குவதற்குச் சிலர் முன்வந்திருப்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

அந்த விமான நிறுவனத்தைத் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய அவர், அரசாங்கம் அதை விற்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

“எம்ஏஎஸ்ஸை எனக்கு மிகவும் பிடிக்கும். எம்ஏஎஸ் நம் தேசிய விமான நிறுவனமாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால், அந்நிறுவனத்தால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லையே”, என்று மகாதிர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்த விமான நிறுவனத்தை விற்கும் சாத்தியத்தை மகாதிர் மறுக்கவில்லை. அதே நேரத்தில் அதை விற்கத்தான் வேண்டுமா என்பதையும் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

“வெளிநாட்டு நிர்வாகியையும் வைத்துப் பார்த்தோம். தொடர்ந்து நட்டக் கணக்குத்தான். அதனால், விற்று விடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது”, என்று கூறிய மகாதிர், உள்நாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் அதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாகக் கூறினார்.

அதே வேளை எம்ஏஎஸ் முன்னாள் நிர்வாகிகளைக் கொண்ட ஒரு தரப்பு அந்த விமான நிறுவனம் தொடர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நேற்று, எம்ஏஎஸ் பணிஓய்வு பெற்றோர் சங்க(மாஸ்ரா)ப் புரவலர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹ்மான், அரசாங்கம் தனியார் துறையுடன் கூட்டாக எம்ஏஎஸை நடத்தலாம் என்ற பரிந்துரையை முன்வைத்தார்.

அரசாங்கம் நெருக்கடி நிலையில் உள்ள எம்ஏஸை மூடிவிடாமல் அதற்குப் புத்துயிர் அளிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.