ரிம1.6பி கூலிம் விமான நிலையத்தைக் கட்டப்போவது தனியார் துறை

கூலிம் அனைத்துலக விமான நிலையத்தைக் கட்டப்போவது தனியார் துறையாம். பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி இதைத் தெரிவித்தார்.

“யார் சொன்னது அரசாங்கம் என்று?”, என்றவர் வினவினார்.

“விமான நிலையம் கட்ட அரசாங்கத்திடம் பணமில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் தனியார் துறை முன்வந்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது அவசியம்”, என்று அஸ்மின் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கெடாவுக்காக புத்ரா ஜெயா அங்கீகரித்துள்ள பெரிய திட்டங்களில் கூலிம் அனைத்துலக விமான நிறுவனம் ஒன்று என அஸ்மின் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

வடக்கில் விமானப் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கூலிமில் ஒரு விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்ப்பட்டதாக அஸ்மின் கூறினார்.

பினாங்கு பாயான் லெப்பாஸ் விமான நிலையத்திலும் நெரிசல் அதிகரித்து வருகிறது, அந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த போதுமான நிலமும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

கூலிம் விமான நிலையத்தால் பாயான் லெப்பாஸ் பாதிக்கப்படாது. சொல்லப்போனால், அதற்கு ஒத்தாசையாக இருக்கும்.