கெடா, ஜொகூரில் 150,000 பேர், நீர் பற்றாக்குறையால் பாதிப்பு

நாடாளுமன்றம் | உலர் வானிலை மற்றும் வறட்சியின் காரணமாக, ஜொகூர் மற்றும் கெடாவில் நீர் விநியோகம் பாதிப்படையக்கூடும் என நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கெடாவில், கோலா மூடா மாவட்டம், ஜொகூரில் சிம்பாங் ரெங்கம், கோத்தா திங்கி மற்றும் பொந்தியான் ஆகிய வட்டாரங்கள் வெப்பக் காலநிலை காரணமாக, சுத்தமான நீரின் அளவு குறையக்கூடும் என்றும், இந்நிலை ஏப்ரல் இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சேவியர் தெரிவித்தார்.

“மார்ச் 20 வரை, கெடாவில் மெர்போக், தஞ்சோங் டாவாய், சிங்கிர், செமெலிங் மற்றும் பெடோங் வட்டாரத்தில் 30,000-க்கும் அதிகமானோரும், கோத்தா திங்கி, பொந்தியான் மற்றும் சிம்பாங் ரெங்கத்தில் 120,000 பேரும் நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காண, லாரிகள் மூலம் நீர் வழங்குதல், குறிப்பிட்ட இடங்களில் தொட்டிகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் சேவியர் சொன்னார்.

“அதுமட்டுமின்றி, கனிம மற்றும் புவிசார் துறை உதவியுடன் நிலத்தடி நீர் தேடல் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன,” என்றார் சேவியர்.