முன்னாள் ஐஜிபி: நியுசிலாந்து படுகொலை தூக்குத் தண்டனை தேவை என்பதைக் காட்டுகிறது

முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ், மூசா ஹசான், தூக்குத் தண்டனையை மொத்தமாக இரத்துச் செய்யக்கூடாது என்பதற்கு கிறைஸ்ட்சர்ச் படுகொலையே நல்ல சான்று என்றார்.

அங்கு ஒரு பயங்கரவாதி 50பேரைச் சுட்டுக்கொன்றான், ஏனென்றால் அங்கு அவனைத் தடுக்க தடுப்புச் சட்டம் இல்லை, நியு சிலாந்தில் மரணத் தண்டனை கிடையாது என்று மூசா கூறினார்.

“நியு சிலாந்தில் மரண தண்டனை இல்லை என்பதால் விருப்பம்போல் நடந்து கொள்ள முடிகிறது.

“அங்கு நான் ஒருவரைக் கொன்றால்கூட எனக்கு மரண தண்டனை கிடையாது”, என மூசா விஸ்மா எம்சிஏ-இல் செய்தியாளர்களிடம் கூறினார்.

சில வழக்குகளில், கொலை வழக்கு போன்றவற்றில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால் கொலைத் தண்டனை தேவைதான் என்று மூசா கூறினார்.

ஆனால், போதைப் பொருள் கடத்தல் முதலியவற்றுக்கு கட்டாய மரண தண்டனை என்பதை மாற்ற வேண்டும் என்றார்.

மரண தண்டனையை முற்றாக அகற்றுவதற்கு எதிராக மசீச ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

அரசாங்கமும் மரண தண்டனையை முற்றாக எடுத்துவிடத்தான் முதலில் தீர்மானித்திருந்தது. ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பின்வாங்கியது. கட்டாய மரண தண்டனைச் சட்டத்தை மட்டுமே மாற்றப் போவதாகக் கூறியது.

கட்டாய மரணத் தண்டனைச் சட்டம் இரத்துச் செய்யப்படுவதால் அப்படிப்பட்ட தண்டனைக்குரிய வழக்குகளில் மரண தண்டனை கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நீதிபதிகளே முடிவு செய்வர்.