மகாதிருடன் பணியாற்றுவது சிரமம்-நுருல் இஸ்ஸா

டாக்டர் மகாதிர் முகம்மட் மீண்டும் பிரதமரானதைக் கண்டு மனம் உடைந்து போனாராம் பெர்மாத்தாங் பாவ் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்.

சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதைத் தெரிவித்தார். ஏன் என்று கேட்டதற்கு முன்பு மகாதிர் பிரதமராக இருந்தபோது அவரால் தன் தந்தை அன்வார் இப்ராகிமுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து மனம் உடைந்து போனதாகக் கூறினார்.

“எங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல அரசாங்கத்தையே கெடுத்து வைத்த ஒரு சர்வாதிகாரியுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்ததைக் குறிப்பிடுகிறேன்.

“அது எளிதாக இல்லை”, என்றாரவர். தந்தை அன்வார், மகாதிருடன் கைகுலுக்கி சமரசம் செய்து கொண்டு இப்போது ஹரப்பானின் அடுத்த பிரதமராவதற்குக் காத்திருந்தாலும் தன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நுருல் கூறினார்.

அன்வார் குற்றமற்றவர் என்றும் அவர் சிறையிடப்பட்டதால் தன் அன்னை ,இப்போதைய துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலையும் தன் உடன்பிறப்புகளையும் பிரிய நேரிட்டதையும் நுருல் வருத்தத்துடன் குறிப்பிட்டார் என ஸ்ரேய்ட்ஸ் டைமஸ் கூறிற்று.