அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும், கடந்த வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்திய ஒரு தரப்பின் குண்டர்தனத்தை கண்டிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் வல்யுறுத்தினார்.
பல்கலைக்கழக அதிகாரிகள் பல்கலைக்கழக மேன்மைக்கு ஏற்ப உண்மையை எடுத்துரைக்கத் தயங்கக் கூடாது என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“பொறுப்பற்ற தரப்புகள் மாணவர்களைத் தாக்கும்போது நமக்கேன் வம்பு என்று பல்கலைக்கழக அதிகாரிகள் ஒதுங்கிப் போய் விடக்கூடாது. எல்லாருமே மெத்தனமாக இருந்துவிட்டால், சில நாள்களுக்குமுன் நடந்த இதுபோன்ற சம்பவம் மற்ற பல்கலைக்கழகங்களிலும் நடக்கலாம்”, என்றாரவர்.
கடந்த வெள்ளிக்கிழமை யுனிவர்சிடி மலாயாவுக்கு எதிர்ப்புறமுள்ள ஒரு உணவகத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது நஜிப் ஆதரவாளர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே கைகலப்பு மூண்டதாகக் கூறப்படுகிறது.