பிரதமரின் உதவியாளர்: நுருல் இஸ்ஸா அவ்வாறு பேசியிருக்கக் கூடாது

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான நுருல் இஸ்ஸா அன்வார், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறித்து எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது அதுவும் சிங்கப்பூர் நாளேடான த ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸுக்கு அளித்த நேர்காணலில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.

இவ்வாறு கூறிய பிரதமரின் அரசியல் செயலாளர் அபு பக்கார் யாக்யா, அரசியல் அரங்கில் விவேகமாக செயல்படும் நுருல் இஸ்ஸா, இன்னும் பக்குவமடையவில்லை, மகாதிரையும் அரசாங்கத்தையும் சரியாக புரிந்துகொள்ளாமல் உணர்ச்சி அவ்சப்பட்டுப் பேசுகிறார் என்றார்.

“ ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆரின் முன்னாள் உதவித் தலைவருமான நுருல் இஸ்ஸா, டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக வேண்டும் என்பது பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் ஒருமித்த முடிவு என்பதையும் அரசாங்கம் ஒரு முடிவெடுக்கிறது என்றால் அது அமைச்சர்களின் கூட்டு முடிவு என்பதையும் மறக்கக் கூடாது.

“மாண்புமிகு துன் இன்றி , ஹரப்பான் 14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இன்றைய அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என்பதையும் நுருல் இஸ்ஸா உணர்ந்தே இருப்பார் என்றும் நம்புகிறேன்”, என்றாரவர்.

நுருல் இஸ்ஸா த ஸ்ரேய்ட்ஸ் டைம்சுக்கு வழங்கிய நேர்காணலில், ஹரப்பான் அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி சீரமைப்புகளைச் செய்யாததால் ஏமாற்றமடைந்ததாகவும் மகாதிருடன் இணைந்து பணியாற்றுவது சிரமம் என்றும் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளி வந்திருந்தது.