பிள்ளைகள் நாடற்றவராக இருப்பதற்குப் பெற்றோரைக் குற்றம் சொல்லக் கூடாது- எல்எப்எல்

பெற்றோரில் ஒருவர் மலேசியராக இருந்தால் போதும் பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடிமகனாகும் தகுதி உண்டு என உரிமைகளுக்காகப் போராடும் வழக்குரைஞர் அமைப்பு(எல்எப்எல்) கூறுகிறது.

பெற்றோர் அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை அதனால்தான் பிள்ளைகள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்று பெற்றொர்மீது பழிபோடுவது பொறுப்பற்றதனம் என்பதுடன் கூட்டரசு அரசமைப்புக்கும் முரணானது என எல்எப்எல் ஆலோசகர் என். சுரேந்திரன் ஓர் அறிக்கையில் கூறினார்.

நேற்று உள்துறை துணை அமைச்சர் முகம்மட் அசிஸ் ஜம்மான், பிள்ளைகள் நாடற்றவராகி விடாமல் குடியுரிமை பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் வைத்திருப்பதை உறுதிப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

“திருமணம் செய்தால் பதிவு செய்ய வேண்டும், பொறுப்பேற்கவும் தயாராக இருக்க வேண்டும்”, என்றவர் சொன்னார்.

அதற்கு சுரேந்திரன், இதே அணுகுமுறையைத்தான் முந்தைய பிஎன் அரசாங்கமும் பின்பற்றியது அதன் விளைவு இன்று பெரும் எண்ணிக்கையிலான பிள்ளைகள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றார்.

கூட்டரசு அரசமைப்பு பெற்றோர் திருமணமானாவர்களாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. பெற்றோரில் ஒருவர் மலேசியராக இருந்தால் போதும் குழந்தை இயல்பாகவே மலேசியக் குடியுரிமை பெறத் தகுதி பெறுகிறது.

“தாயார் குடியுரிமை அல்லாதவர் என்றாலும் நிலைமையில் எந்த மாற்றமும் இராது. ஏனென்றால் பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் குடியுரிமை பெற்றிருப்பது போதும்.

“சுருக்கமாக சொன்னால், தாயார் குடியுரிமை அல்லாதவராக இருந்தாலும் திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் பிரச்னையில்லை, தந்தை குடிமகனாக இருந்தால் பிள்ளையும் மலேசியக் குடியுரிமை பெறும் தகுதியை இயல்பாகவே பெற்றுவிடுகிறது”, என சுரேந்திரன் கூறினார்.

இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு அது சட்டத்தைச் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.

“அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை மாற்றிகொண்டு மலேசியாவில் பிறக்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோரில் ஒருவர் மலேசியக் குடியுரிமை உள்ளவராக இருக்கும் பட்சத்தில், அவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்டதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”, என்றவர் மேலும் கூறினார்.