ரோனால்ட் கியாண்டி பொதுக் கணக்குக் குழுத் தலைவராக இருக்கக் கூடாது என்று கூறுவோர் வரிசையில் பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.
கியாண்டி உடனடியாக அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
“பிஏசி எந்த விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தாலும் அவரையும் வைத்துக்கொண்டே விசாரிக்கலாம், ஆனால் அவர் தலைவர் பொறுப்பில் இருக்கக் கூடாது”, என்றாரவர்.
பொதுக் கணக்குக் குழுத் தலைவராக எதிரணி உறுப்பினர்தான் நியமிக்கப்படுவார் என்ற பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப சாபா நாடாளுமன்ற உறுப்பினரான கியாண்டி பிஏசி தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அவர் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பின்னர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் கட்சியான பெர்சத்துவில் சேர்ந்தார்.
இதனால் ஒரு சிக்கல். நேற்று பிஏசி-இல் இருந்த பாஸ், அம்னோ உறுப்பினர்கள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். கியாண்டியை அப்பதவியிலிருந்து அகற்றும்வரை அதில் தாங்கள் இருக்கப் போவதில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள்.
அவரை மாற்றுவதில் முதலில் மகாதிருக்கு விருப்பமில்லைதான். அவரே பிஏசி தலைவராக தொடர்வார் என்றுதான் அவர் குறிப்புக் காட்டியிருந்தார்.
ஆனால், வார இறுதியில் பிரதமர், அரசாங்கம் வேறொரு எம்பியை பிஏசி தலைவராக நியமிப்பது குறித்து பரிசீலிக்கும் என்று கூறினார்.