இஸ்ஸா : டாக்டர் எம்-ஐ நான் சர்வாதிகாரி எனச் சொல்வது முதன்முறை அல்ல

சிங்கப்பூர், ஸ்ரேட்ஸ் டைம்ஸ் ஊடக நேர்காணலின் போது, பிரதமர் டாக்டர் மகாதீர் குறித்து கருத்துரைத்ததைப் பெர்மாத்தாங் பாவ் எம்பி, நூருல் இஸ்ஸா அன்வார் தற்காத்து பேசியுள்ளார்.

இன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் மூத்த மகள், மகாதீரை சர்வாதிகாரி எனக் கூறுவது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும், கடந்த தேர்தலுக்கு முன்னர் பல முறை அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் விளக்கினார்.

“என்னைப் பொறுத்தவரை அது உண்மை. இதை நான் தேர்தலுக்கு முன்னமே சொல்லியிருக்கிறேன். பெர்சே 3 மற்றும் 4 பேரணிகளின் போதும் சொல்லியிருக்கிறேன்.

“ஆனால், இப்போது நான் சொல்லியது மட்டும் எப்படி பிரச்சனையானது என்று புரியவில்லை,” என நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூறினார்.

கடந்த வாரம், ஸ்ரேட்ஸ் டைம்ஸ் நேர்காணலில், மக்கள் பிரதிநிதியாக தான் இருப்பது இதுவே இறுதி என்று இஸ்ஸா தெரிவித்தார்.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில், அம்னோவின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் இணைவது குறித்து, நூருல் இஸ்ஸா ஏமாற்றத்தை வெளிபடுத்தினார்.

அதுமட்டுமின்றி, ‘பல சேதங்களுக்குக் காரணமான அந்த முன்னாள் சர்வாதிகாரி’ டாக்டர் மகாதிருடன், இணைந்து பணியாற்றுவதில் இருக்கும் சவால்களைத் தொட்டும் அவர் பேசினார்.

“எங்கள் குடும்பம் மட்டுமின்றி, நாட்டின் அமைப்பு முறையிலும் பல சேதங்களை ஏற்படுத்திய, அந்த முன்னாள் சர்வாதிகாரியுடன் ஒத்துழைத்துப் போவது சுலபமான ஒன்றல்ல,” என்றார் அவர்.

பிஎச் தலைமையிலான நிர்வாகத்தில். மாற்றங்கள் மெதுவாகவே நடைபெறுவதாகவும் நூருல் சொன்னார்.

“மாற்றங்கள் மெதுவாக நடப்பது உண்மை….. ஆக, நான் அவ்வாறு சொன்னது தவறா? அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? நாட்டின் குடிமகன் என்ற வகையில், சீர்திருத்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிப்பது தவறில்லை என நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.