‘கேமரன் மலை குடியானவர்களை அநியாயமாக வெளியேற்றிய எம்பி பதவி விலக வேண்டும்’

அரசியல் காரணங்களுக்காக கேமரன் மலை குடியானவர்களை அநியாயமாக வெளியேற்றிய பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கோரிக்கையை முன்வைத்த பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, குடியானவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு உண்மையான காரணத்தைத் தெரிவிக்காத மந்திரி புசார் இனியும் அந்தப் பதவியில் இருக்கத் தகுதியற்றவர் என்று சாடினார்.

60 பண்ணைகள் அழிக்கப்பட்டதற்கு அவை சுங்கை இச்சாட்டுக்குத் தூய்மைக்கேட்டை விளைவிப்பதாக அவர் கூறிய காரணம் உண்மையல்ல என்பது நிறுவப்பட்டு விட்டது.

“எனவே, குடியானவர்கள் வெளியேற்றப்பட்டதற்கான உண்மைக் காரணம் கூறப்படாத நிலையில் வான் ரோஸ்டி தொடர்ந்து மந்திரி புசாராக இருப்பது நியாயமல்ல.

“அப்பாவி குடியானவர்களுக்கு எதிரான அவரது கொடூரமான நடவடிக்கை பற்றி மேலும் சங்கடப்பட வைக்கும் தகவல்கள் வெளிவருவதற்குமுன் அவர் விரைவில் பதவி விலகுவதே நல்லது.

“மேலும், அவர் அரசியல் அழுத்தத்துக்கு அடிபணிந்துதான் குடியானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார் என்றும் நம்பப்படுகிறது. ஏனென்றால் அண்மைய கேமரன் மலை இடைத் தேர்தலில் குடியானவர்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரித்திருக்கிறார்கள்”, என்று இராமசாமி கூறினார்.

வான் ரோஸ்டி என்ன சொல்கிறார் என்றால், குடியானவர்களே கேமரன் மலை குடியிருப்பாளர்களுக்குக் குடிநீர் வழங்கும் ஆறுகளில் ஒன்றான சுங்கை இச்சாட்டின் தூய்மைக்கேட்டுக்கு முக்கிய காரணம் என்கிறார்.

எனவேதான், சுங்கை இச்சாட்டுக்கு அருகில் அமைந்துள்ள பண்ணைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்றாம்.

இதை இராமசாமி ஏற்கவில்லை. அவர் வார இறுதியில் கேமரன் மலை சென்று பார்த்திருக்கிறார். தாம் அறிந்தவரை குடியிருப்பாளர்களுக்குக் குடிநீர் வழங்குவது சுங்கை தெர்லாதான் என்றும் சுங்கை இச்சாட் அல்ல என்றும் அவர் கூறினார். இரு ஆறுகளும் அருகருகே உள்ளன. குறிப்பிட்ட தொலைவு தனித்தனியே ஓடி பிறகு இரண்டும் ஒன்றுகலக்கின்றன.

“எனவே, வான் ரோஸ்டி அறிவாரோ இல்லையோ, குடியிருப்பாளர்களுக்குக் குடிநீர் வழங்குவது சுங்கை இச்சாட் அல்ல.

“இந்தத் தவற்றை உணராத அவர், அவரை அறியாமலேயே பண்ணைகளின் அழிப்புக்குக் காரணமாக இருந்து விட்டார்”, என்றாரவர்.

60 ஆண்டுகளுக்குமேலாக அங்கு பயிர் செய்து வரும் குடியானவர்கள் திடீரென்று பிரச்னையாக மாறியது எப்படி என்றும் இராமசாமி கேள்வி எழுப்பினார்.

2017வரை அவர்களுக்கு அரசு நில அதிகாரிகள் தற்காலிக லைசென்சுகள் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

“பல தலைமுறைகளாக நிலத்தில் பயிர் செய்து வந்துள்ள குடியானவர்கள் ஒரே நாளில் சட்டவிரோத செயல்பாட்டாளர்களாக மாறியது எப்படி?

“அவர்களின் நடவடிக்கைகள் குறித்து நிலத் துறையிடம் எந்த ஆவணமும் இல்லையா, பிறகு எப்படி பயிர் செய்வதற்கு லைசென்சுகள் கொடுத்து வந்தார்கள்?

“சிறிய குடியானவர்கள் குற்றமிழைக்கிறார்கள் என்று அவர்கள்மீது கவனம் செலுத்துவது ஏன்? பெரிய அளவில் தூய்மைக்கேட்டைச் செய்யும் பெரிய தோட்டங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல் தொடர்புள்ளவர்கள் என்பதாலா?”, என்றும் இராமசாமி வினவினார்.