தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது : தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்துமாறு பிஎச்-க்கு வலியுறுத்து – பிஎன்எம்

நாட்டில் தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறவில்லை என்று தெரிவித்த ஒரு கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மலேசியத் தேசிய வங்கி (பிஎன்எம்), தொழிலாளர் சட்டங்களை மேம்படுத்தவும் தொழிலாளர் சந்தையைப் புதுப்பிக்கவும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தொழிலாளர்களோடு ஒப்பிடும்போதும், மலேசியத் தொழிலாளர்களுக்கு உற்பத்தி மட்டத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது என இன்று பேங்க் நெகாரா வெளியிட்ட ‘2018 ஆண்டு அறிக்கை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியப் பொருளாதாரம் பல தொழிற்துறைகளைச் சார்ந்த உழைக்கும் தொழிலாளர்களால் ஆனது என்றாலும், தேசிய வருவாயைக் காட்டிலும் குறைந்த சம்பளமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35.2 விழுக்காடு – நாட்டின் பொருளாதார அளவீட்டுடன் (52.7 விழுக்காடு) ஒப்பிடும்போது.

மிகவும் திறமையான மற்றும் உயர் ஊதிய வேலை வாய்ப்புகள் ‘போதுமானதாக இல்லை’ என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு முதல் 2017 வரை, குறைந்த திறன் வாய்ந்த மற்றும் குறைந்த ஊதிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 4.6 விழுக்காடு அதிகரித்த வேளையில், அதிக திறன் வாய்ந்த மற்றும் உயர் ஊதிய வேலைகள் 2.8 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளன.

மலேசியா ஓர் உயர் வருமான பொருளாதார நாடாக மாற விரும்பினால், அதிகத் திறமையான மற்றும் அதிக ஊதியம் பெறும் வேலைகளை உருவாக்குவதில் பிஎச் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய வங்கியின் ஆளுநர் ஷம்சியா முகமட் யூனுஸ் வலியுறுத்தியுள்ளார்.

“உயர் திறமையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தரமான முதலீடுகளைக் கவருவதில் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

“அதுமட்டுமின்றி, தொழிலாளர்களை வெளியனுப்புவதைக் குறைத்து, தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, உற்பத்தித்திறனைப் பிரதிபலிக்கும் ஊதியத்தை வழங்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.