கைப்பற்றப்பட்ட ஆடம்பரக் கப்பலான இக்குவானிமிடியைப் பராமரிக்க 2018-இன் கடைசி 5 மாதங்களில் புத்ரா ஜெயா ரிம 11 மில்லியனைச் செலவிட்டுள்ளது.
அது, 2018 ஆகஸ்டிலிருந்து டிசம்பர்வரை அக்கப்பலைப் பராமரிக்கவும் பழுது பார்க்கவும், எரிபொருளுக்கும், வழக்கு விவகாரங்கள், காப்புறுதிக் கட்டணங்களுக்காகவும் கப்பலை விற்கும் நடவடிக்கைகளுக்காகவும் ஆன செலவு என நிதி அமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக வழங்கிய பதிலில் கூறி இருந்தார்.
அது போக, இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மார்ச்வரை அதன் பராமரிப்புக்காக மேலும் ரிம3.22 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
“ஆடம்பரக் கப்பலான இக்குவானிமிடி லங்காவியில், கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது”, என்றாரவர்.
அக்கப்பலை விற்பதற்கு முதலில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை, அடுத்த முயற்சி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் லிம் தெரிவித்தார்.