படிப்பில் சிறந்த மாணவிக்கு ஆறாண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை

நாடற்றவரும் எஸ்டிபிஎம் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்றவருமான ரோய்ஸா அப்துல்லா ஆறாண்டுகள் காத்திருந்த பின்னர் இன்று அவரது குடியுரிமையைப் பெற்றார்.

தனக்குக் குடியுரிமை கிடைத்ததற்கு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் ஸுரைடா கமருடின், தன் ஆசிரியர்கள் உள்பட பலரது உதவிதான் காரணம் என்று ரோய்ஸா கூறினார்.

“இது உண்மையிலேயே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. ஏப்ரல் 25-இல் என்னுடைய பிறந்த நாள் என்பதால் இது என் பிறந்த நாள் பரிசு. நீண்ட காலம் காத்திருந்தேன், இப்போது என் கண்ணெதிரேயே எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது”, என்று புத்ரா ஜெயாவில் உள்துறை அமைச்சு தலைமையகத்தில் அவர் செய்தியாளர்கலிடம் தெரிவித்தார்.

ரோய்ஸாவுடன் ஸுரைடாவும் காப்பார் பிகேஆர் நலவளர்ச்சிப் பிரிவின் பிரதிநிதி சத்தியமூர்த்தியும் வந்திருந்தனர்.

எஸ்டிபிஎம் தேர்வில் 3ஏ பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பிறப்புச் சான்றிதழோ அடையாள அட்டையோ இல்லாததால் ரோய்ஸாவால் உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை

எஸ்பிஎம் தேர்வில் 7 ஏ-க்களும் பிஎம்ஆரில் எல்லாப் பாடங்களிலும் ஏ எடுத்தவர் ரோய்ஸா.

பெயர் தெரியாத தந்தைக்கும் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கும் பிறந்தவர் ரோய்ஸா. அவரை மலேசிய குடும்பம் ஒன்று தத்தெடுத்து. தத்தெடுத்த தாயாரும் 2014-இல் காலமானார்

இதனால் அவருக்குச் சட்டப்பூர்வ பாதுகாவலர்கூட இல்லாமல் போனது. குடியுரிமை பெற விண்ணப்பிக்க சட்டப்பூர்வ பாதுகாவலராவது இருப்பது அவசியம்.

ரோய்ஸாவின் இக்கட்டான நிலையையும் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவதையும் அறிந்த ஸுரைடா அவருக்குச் சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்க முன்வந்ததாகத் தெரிகிறது.