ஜொகூர் நுகர்வோர், மனித வளம் மற்றும் ஒற்றுமை குழுவின் தலைவர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன், ஈமச்சடங்குக் காரியங்களுக்காக ஜொகூர் பாரு இந்தியர்களுக்கு 1.9 ஏக்கர் நிலம் ஒதுக்க, மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார்.
பிஎன் அரசாங்கத்தால் முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை நிராகரிப்பதன் வழி, மாநில அரசு சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொள்ளவில்லை என முன்னாள் ஜொகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் கூறியதைத் தொடர்ந்து, இராமகிருஷ்ணன் இதனை அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட நிலம், தஞ்சோங் லங்சாட் துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால், அது பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது என இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, மந்திரி பெசார் ஒஸ்மான் சாப்பியான், 1.9 ஏக்கர் புதிய நிலத்தைப் பார்வையிட்டதாகவும் அவர் சொன்னார்.
“ஜொகூரில் இந்தியர்கள் இறுதிச் சடங்குக் காரியங்களுக்கான இடம் வெற்றிகரமாக அமைய, பாசீர் கூடாங் நகரசபையுடன் இணைந்து பணியாற்றுவதோடு, முழு ஆதரவையும் நாங்கள் வழங்குவோம்,” என்றார் அவர்.