டாக்டர் மகாதிரின் மகன் இயக்குநர் ஆன பிறகு, பேருந்து நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளன

பிரதமர் மகாதிரின் மூத்த மகன், மிர்ஸான் மகாதிர் இயக்குநராக நியமிக்கப்பட்ட பின்னர், நஷ்டத்தில் இருந்த கெட்ஸ் குளோபல் பெர்ஹாட் நிறுவனத்தின் பங்குகள் 173 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இன்று மாலை 3.35 மணி வரை, அந்த விரைவு பேருந்தின் ஒரு பங்கு, 22.5 சென்னிலிருந்து 35.5 சென்னாக உயர்ந்துள்ளதாக புர்சா மலேசியா தெரிவித்துள்ளது.

இன்று காலை 11 மணிக்கு, அந்நிறுவனத்தின் பங்கு ஒன்று 37.5 சென் வரை உயர்ந்தது. காலை 9 மணிக்குச் சந்தை திறக்கப்பட்டது முதல், 46.9 யூனிட் பாங்குகள் விற்கப்பட்டுள்ளன.

இன்று அதிக சுறுசுறுப்பாக இயங்கிய கவுண்டர் கெட்ஸ் குளோபல் நிறுவனம், அண்மையில் RM1.35 இலட்சம் நஷ்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேராக், கமுந்திங்கை மையமாகக் கொண்ட கெட்ஸ் குளோபல் நிறுவனம், இதற்கு முன்னர் கொண்சோர்டியம் பஸ் எக்ஸ்பிரஸ் என்று அறியப்பட்டது. நேற்று, மிர்ஸானை நிர்வாகம் அல்லாத, சுயாதீன இயக்குனராக அது நியமித்தது.

தற்போது, பெட்ரோன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் மிர்ஸான் இயக்குநராக இருக்கிறார்.