கேமரன் மலையில் வாக்களிப்புக்கு முந்திய நாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஹெலிகாப்டரில் சென்று வாக்கு வேட்டையாடினார். ஒன்றும் பலிக்கவில்லை. அது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குக் கிடைத்த முதல் அடி.
இம்மாதம் செமிஞ்யே இடைத் தேர்தலிலும் பிரதமரின் பெர்சத்துக் கட்சியால் அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அது அக்கூட்டணிக்குக் கிடைத்த இரண்டாவது அடி.
இப்போது எல்லாருடைய கண்களும் மகாதிருக்குப் பின் பிரத்மர் பொறுப்பை ஏற்கப் போகும் அன்வாரின்மீது. அவராவது ரந்தாவில் ஏப்ரல் 13 இடைத் தேர்தலில் ஹரப்பான் கூட்டணியின் தொடர்- தோல்வியைத் தடுத்து நிறுத்துவாரா?
இந்த இடைத் தேர்தல் குறித்துக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட யுகேஎம் ஆட்சி இயல் விரிவுரையாளர் முகம்மட் நட்ஸிரி முகம்மட் நூர், ரந்தாவை அடுத்துள்ள போர்ட் டிக்சன் தொகுதி எம்பி என்பதால் அன்வார்தான் ரந்தாவில் ஹரப்பான் தேர்தல் பரப்புரைகளுக்கு தலைமை தாங்குவார் என்று நம்புகிறார்.
“அங்கு கிடைக்கும் வெற்றி ஹரப்பானின் மன உறுதிக்கும் அன்வார்மீதான நம்பிக்கைக்கும் பெரியதோர் ஊக்கமாக அமையும்”, என மலேசியகினிக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
அதேபோல், முகம்மட் அம்னோ/பிஎன்னுக்குத் தலைமையேற்ற பின்னர் கடந்த இரண்டு இடைத் தேர்தல்களில் வெற்றியைக் கண்டிருந்தாலும் இந்த ரந்தாவ் இடைத் தேர்தல், அவருக்கு முக்கியமான ஒன்று என அவ்விரிவுரையாளர் கூறினார்.
“அடுத்த தேர்தலில் பிஎன் -பாஸ் கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமராக பெயர் குறிப்பிடப்படுவதற்குப் பிரகாசமான வாய்ப்பைப் பெற்றுள்ளவர் முகம்மட்தான்.
“எனவே ரந்தாவை வெல்வது எதிரக்கட்சிக்கும் முக்கியமாகும்”, என்று குறிப்பிட்டவர், அங்கு ஏற்படும் தோல்வி அடுத்த பொதுத் தேர்தலையும் பாதிக்கலாம் என்றார்.
“அந்த வகையில் பிஎன், அதிலும் குறிப்பாக முகம்மட் ரந்தாவில் வெற்றி பெற முழுமூச்சாகப் பாடுபடுவார்”, என்றார்.
வெற்றி வாய்ப்பு என்று பார்த்தால் ஹரப்பானுக்கும் பிஎன்னுக்கும் 50-50 தான். ஆனாலும், நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் என்ற தகுதி எதிரணிக்குக் கூடுதல் வாய்ப்பாக அமைகிறது என்கிறார் விரிவுரையாளர்.
2004 பொதுத் தேர்தலில் முகம்மட் அங்கு வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீராம் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாதபடி தேர்தல் ஆணையம் தடுத்து விட்டதால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் ஸ்ரீராம் தேர்தல் நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து முகம்மட்டின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து.
அதன் விளைவாக, மலாய்க்கார வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அதே வேளையில் கணிசமான இந்திய, சீன வாக்காளர்களையும் கொண்ட ரந்தாவில் ஒரு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.