ரந்தாவ் இடைத் தேர்தலின் பிகேஆர் வேட்பாளர் ஸ்ரீராம், உள்ளூர் பிகேஆர் கிளைத் தலைவர் ஒருவரை மஇகா உறுப்பினர் தாக்கியதாகக் கூறியிருப்பதை நிரூபிக்க வேண்டும் என ம இகா கேட்டுக்கொண்டிருக்கிறது.
24மணி நேரத்துக்குள் அதை நிரூபிக்காவிட்டால் ஸ்ரீராம்மீது மஇகா வழக்கு தொடுக்கும் என அக்கட்சியின் துணைத் தலைவர் கே.சரவணன் எச்சரித்தார்.
“மஇகா உறுப்பினர் ஒருவர் தாக்கியது உண்மை என்றால் உள்துறை அமைச்சு அவரைக் கைது செய்து அவர் மஇகா கட்சிக்காரர்தான் என்பதை நிரூபிக்கட்டும்.
“24மணி நேரத்தில் அதைச் செய்ய வேண்டும் அல்லது ஸ்ரீராம் மன்னிப்பு கேட்க வேண்டும்”, என்று சரவணன் இன்று ரந்தாவில் மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று தாமான் செம்பகா கிளைத் தலைவர் கே.சுரேஷ் அப்பகுதியில் மண்டிக்கிடந்த புதர்களைத் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
கையில் ஒரு வெட்டுக்காயத்துடன் அவர் தப்பினார்.
பின்னர் ஒரு செராமாவில் உரையாற்றிய ஸ்ரீராம் ஒரு மஇகா கட்சிக்காரர்தான் அவரைத் தாக்கினார் என்று கூறினார்.
ஸ்ரீராம் தோல்விகாணும் நிலையில் உள்ளார். அதனால்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார் என சரவணன் சாடினார்.
குரங்குத்தனமாக நடந்துகொள்ளும் ஹரப்பான் வேட்பாளருக்கு ரந்தாவில் எவரும் வாக்களிக்கப் போவதில்லை என்றும் சரவணன் கூறினார்.
ரந்தாவ் இடைத் தேர்தல் நான்கு-முனைப் போட்டியாக அமைந்துள்ளது. ஸ்ரீராம், அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், சுயேச்சைகளான ஆர்.மலர், முகம்மட் நோர் யாசின் ஆகியோர் அங்கு போட்டியிடுகின்றனர்.