93 வயதாகும் தாம் இன்னும் அதிக காலம் வாழப் போவதில்லை என்பதை உணர்ந்தே இருப்பதாகக் கூறுகிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“இவ்வளவு காலம் வாழ்ந்ததே பெரும் பேறாகும்.
“எனக்கு வயதாகி விட்டதை உணர்கிறேன். விரைவில் உடல் நலிவுற்று இறந்து போவேன்.
“அதனால் விரைந்து செயல்பட வேண்டியுள்ளது. மற்றவர்கள் மெதுவாக செயல்படலாம். ஆனால், எனக்கு நாட்டுக்கு என்ன செய்ய நினைக்கிறேனோ அதைச் செய்து முடிக்க போதுமான கால அவகாசம் இல்லை”, என ஃபோகஸ் மலேசியாவுக்கு அளித்த நேர்காணலில் மகாதிர் கூறினார்.
தாம் ஓர் இடைக்காலப் பிரதமர்தான் என்றும் நேரம் வரும்போது வெளியேறத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
பதவியில் இருக்கும்வரை முடிந்தவரை சிறப்பாக செயல்பட விரும்புவதாகவும் அந்த லங்காவி எம்பி கூறினார்.
இன்ன தேதிவரைதான் பிரதமர் என்று நாள் குறிக்கப்படவில்லை என்பதால் எப்போது வெளியேறச் சொன்னாலும் வெளியேற ஆயத்தமாக இருக்கிறார் அவர்.