தோக் மாட்: இன நல்லிணக்கத்தைக் கெடுக்காமல் பரப்புரை செய்வீர்

ரந்தாவ் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளராக போட்டியிடும் முகம்மட் ஹசான், அத்தொகுதியில் போட்டியிடுவோர் இன நல்லிணக்கத்தைக் கெடுக்காதபடி ஆரோக்கியமான முறையில் பரப்புரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“பரப்புரை ஆரோக்கியமான நிலையில் நடக்கட்டும். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக பரப்புரையில் ஈடுபடும் நாம் பல இனங்கள் வாழும் ரந்தாவில் இணக்க நிலையைக் கெடுக்கும் விவகாரங்களை எழுப்பக்கூடாது”, என்றாரவர்.

தோக் மாட் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட், பரப்புரைக் காலத்தில் எந்தவொரு குறிப்பிட்ட இனத்தின்மீதும் கவனம் செலுத்தப்போவதில்லை என்றார்.

“இந்த இனத்தைத்தான் சந்திப்பேன், அந்த இனத்தைத்தான் சந்திப்பேன் என்றில்லை. என் வாக்காளரிடையே நான் வேறுபாடு காட்டுவதில்லை.

“இந்த 14 நாளில் எத்தனை வாக்காளர்களைச் சந்திக்க முடியுமோ அத்தனை பேரையும் சந்திக்க வேண்டும். அதுதான் முக்கியம்”, என்றார்.

முகம்மட் இன்று காலை பண்டார் ஸ்ரீ செண்டாயான் சீனப் பள்ளியில் ரந்தாவ் இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களும் அதே கருத்தைத்தான் தெரிவித்தனர்.

“பரப்புரை காலம் முழுவதும் இன, சமய விவகாரங்களை எழுப்பாதிருக்க வேண்டும்.

”எல்லாத் தரப்புகளும் என்ன செய்தார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை எடுத்துக்கூறட்டும். ரந்தாவ் இடைத் தேர்தல் மலேசியா பாருவுக்கு ஓர் அளவுகோலாக இருக்கட்டும்”, என பிரதமர்துறை அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா கூறினார்.

மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், உண்மை நிலவரங்களை அடிப்படையாக வைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.

“இனத்தையும் சமயத்தையும் சொல்லி மக்களைக் குழப்பாதீர்கள்”, என்று வலியுறுத்தினார்.