‘சிஇபி அறிக்கையைக் கண்டிப்பாக பொதுவில் வெளியிட வேண்டும்’

அரசாங்க ஆலோசனை மன்றத்தின் (சிஇபி) அறிக்கையில், உணர்ச்சியைத் தூண்டும் சில விஷயங்களில் திருத்தம் செய்தாவது, பொதுவில் வெளியிட வேண்டும் என்று, 54 அரசு சார்பற்ற இயக்கங்கள் மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன.

நிறுவன மறுசீரமைப்பு குழுவைப் (ஐஆர்சி) போல், சிஇபி அறிக்கையும் அரசாங்க சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டதனால், அதனைப் பொதுவில் அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது.

தேவையானால், நிதி நிலைமை மற்றும் சில இரகசியத் தகவல்களைத் தவிர்த்துவிட்டு, அந்த அறிக்கையை வெளியிடுமாறு அக்குழு நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்குழுவில், பெர்சே, தெனாகநீத்தா, முஸ்லிம் நிபுணர்கள் மன்றம் (Muslim Professional Forum), குரோனிசம் (Kronisme [C4]) போன்ற அமைப்புகள் இணைந்துள்ளன.

ஓ.எஸ்.ஏ.-ஐ மறுஆய்வு செய்க

இதற்கிடையில், சிஇபி அறிக்கைக்குப் பயன்படுத்தும், ‘அதிகாரப்பூர்வ இரகசிய சட்டம் 1972’-ஐ (ஓ.எஸ்.ஏ) ‘விரிவான மதிப்பீடு’ செய்ய வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

அச்சட்டம், (தகவல் சுதந்திரம்) சர்வதேச தரத்திற்கு இணங்க வேண்டும், தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள் தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்டில் கையளிக்கப்பட்ட சிஇபி மற்றும் ஐஆர்சி அறிக்கைகளை, பொதுவில் அறிவிக்கப் போவதில்லை என பிரதமர் டாக்டர் மகாதி முகமட் முடிவெடுத்தார்.