கடந்தாண்டு பொதுத் தேர்தலில், பிஎன் மற்றும் பிஎச் வேட்பாளர்களிடையே, நேர்முனை போட்டியாக இருந்திருக்க வேண்டிய ரந்தாவ் தேர்தல் களம், ஏப்ரல் 13 இடைத்தேர்தலில் நான்கு முனை மோதலாக மாறியுள்ளது.
பிப்ரவரி 18-ம் தேதி, பெடரல் நீதிமன்றம், தேர்தல் நீதிமன்றத்தின் முடிவைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்த பின்னர், முகமட் ஹசானின் வெற்றி இரத்து செய்யப்பட்டு, ரந்தாவ் சட்டமன்றம் காலியானது.
இன்று, இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய, முந்தைய இரு வேட்பாளர்களுடன், சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் களமிறங்கினர்.
ரந்தாவ் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பான மலேசியாகினியின் வழிகாட்டி :
முகமட் ஹசான்
ரந்தாவ்வில் பிறந்து வளர்ந்த, முகமட், 2004 முதல் ரந்தாவ் நாற்காலியைக் வென்றதுடன், அதே ஆண்டில் மாநில மந்திரி பெசாராகவும் நியமிக்கப்பட்டார்.
தோக் மாட் என்று உள்ளூர் மக்களிடையே நன்கு அறிமுகமான முகமட், கடந்த பொதுத் தேர்தல் வரை ரந்தாவ் தொகுதியைத் தற்காத்து வந்துள்ளார்.
62 வயதான முகமட், கடந்தாண்டு ஜூலையில் அம்னோ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு டிசம்பரில், அஹ்மட் ஜாஹிட் ஹமிடியிடமிருந்து தலைவர் பதவியை ஏற்றார்.
அவரது தலைமையில், அம்னோ – பாஸ் இடையிலான உறவு வலுப்பெற்றது. அதன்வழி, கேமரன் மலை மற்றும் செமினி இடைத்தேர்தல்களில் அம்னோ வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் எஸ் ஶ்ரீராம்
கடந்த பொதுத் தேர்தலில், ரந்தாவ்வில் போட்டியிட வேண்டிய ஶ்ரீராம், வேட்புமனு நாளன்று தேர்தல் ஆணையம் வழங்கிய ‘பாஸ்’-ஐக் கொண்டுவராததால், வேட்புமனு தாக்கல் மையத்தில் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டார்.
அதனை எதிர்த்து அவர் போட்ட வழக்கை ஏற்று, தேர்தல் நீதிமன்றமும் ஃபெடரல் நீதிமன்றமும் ரந்தாவ் தேர்தல் முடிவுகளை இரத்து செய்தது. அதனை அடுத்து, அத்தொகுதியில் போட்டியிட அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த, ஒரு மயக்க மருந்து கொடுக்கும் நிபுணரான ஶ்ரீராம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ரந்தாவ் பிகேஆர்-ல் பணி செய்யத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.
இது அவர் போட்டியிடும் முதல் தேர்தல் ஆகும்.
ஆர் மலர்
50 வயது நிரம்பிய இந்தக் குடும்ப மாதுவைப் பலருக்குத் தெரியாது. ஆனால், அவர் 2 நாள்கள் மௌனமாக இருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
கேமரன் மலையில் தங்கள் வேட்பாளரைப் பேச அனுமதிக்காதப் பிஎன்-க்கும் செமினியில் அதே தவற்றைச் செய்த பிஎச்-க்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இந்த இடைத்தேர்தலில் களமிறங்கியதாக மலர் தெரிவித்தார்.
தி ஸ்டார் நாளிதழின் படி, மலர் 25 ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர். அங்கு வானொலி அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இன்னும் சில நாள்களில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாக அவர் கூறினார்.
‘மரம்’ சின்னத்தின் கீழ் அவர் போட்டியிடவுள்ளார்.
முகமட் நோர் யாசின்
கெமிஞ்சேயில் பிறந்த, 66 வயதான, முகமட் நோர் யாசின், பாஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர், தற்போதும் பாஸ் கட்சியில் இருப்பதாகக் கூறிக்கொள்கிறார். ஆனால், பாஸ் அவர் தனது உறுப்பினர் அல்ல என்று கூறியுள்ளது.
2013-ல், கெமிஞ்சே நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
முகமட் நோர் அமானாவில் இணைந்துவிட்டதாக, நெகிரி செம்பிலான் மாநில அமானா துணைத் தலைவர் கூறியுள்ளார்.
ரந்தாவில், இஸ்லாம் அடிப்படையிலான மேம்பாட்டினைக் கொண்டுவர, தான் போட்டியிடுவதாக அவர் சொன்னார். ‘பேன்’ சின்னத்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.