ஹாடி: பாஸ்-அம்னோவைக் குறைகூறுவோர் ‘யூதர்கள்’

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பாஸ்-அம்னோ ஒத்துழைப்பைக் குறைகூறுவோர் யூதர்களுக்கு ஒப்பானவர்கள் என்று சாடினார்.

நாட்டைக் காக்கத்தான் பாஸும் அம்னோவும் ஒத்துழைப்பதாக அவர் வலியுறுத்தினார்.

“பாஸும் அம்னோவும் ஒன்றுசேர்வதைக் குறை கூறுகிறார்கள். மற்ற இனங்களுக்கு எதிராக போரிடத்தான் அவை ஒன்றுசேர்வதாகக் கூறுகிறார்கள். (எங்களைக்) குறை சொல்வோர் நபிகள் காலத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருப்பதைக் காண விரும்பாத யூதர்கள் போன்றவர்கள்.

“இது நாம் எதிர்த்துப் போராட வேண்டிய ஒருவகை நோய். வாருங்கள் ஒன்றுபட்டு எதிரிகளை நரகத்துக்குத் துரத்தி அடிப்போம்”. சாபாக் பெர்ணாமில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ஹாடி அவ்வாறு பேசியதாக த மலேசியன் இன்சைட் கூறியது.

யாருடைய பெயரையும் ஹாடி குறிப்பிடவில்லை என்றாலும் எதிரிகள் என்றவர் குறிப்பிட்டது டிஏபி தலைவர்களைத்தான் என்று நம்பப்படுகிறது ஏனென்றால் அவர்கள்தான் பாஸ்- அம்னோ ஒத்துழைப்பைக் குறைகூறி வந்துள்ளனர்.