நஜிப்பின் பணமோசடி வழக்கு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட வேண்டும்- அன்வார்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பணமோசடி வழக்கு விசாரணைக்கு வரும்போது அது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட வேண்டும் என்பதை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஆதரிக்கிறார்.

என்றாலும், “நேரடியாக ஒளிபரப்புவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்”, என்று அந்த போர்ட் டிக்சன் எம்பி கூறியதாக சினார் ஹரியான் செய்தி தெரிவிக்கிறது.

“இதற்குமுன் அப்படி நடந்ததில்லை. ஆனால் அப்படிச் செய்வதிலும் நன்மை உண்டு. நாட்டிடமிருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை மக்கள் அறிந்துகொள்ள அது உதவும்”, என்று அன்வார் கூறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நேரலை செய்யப்பட வேண்டும் என்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு மகஜருக்கு இதுவரை 45,000 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.