ரிம1.5 பில்லியன் வருமான வரி செலுத்துக- நஜிப்பிடம் ஐஆர்பி கெடுபிடி

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பணமோசடி வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வர இன்னும் இரண்டு நாள்கள் உள்ள வேளையில் நிலுவையில் உள்ள ரிம1.5பில்லியன் வருமான வரியைக் கட்டச் சொல்லி அவருக்கு உள்நாட்டு வருமான வாரியம்(ஐஆர்பி) கடிதம் அனுப்பியுள்ளது.

2011இலிருந்து 2018வரை ஏழாண்டுகளுக்கு நஜிப் வருமானத்துக்குக் கணக்குக் காண்பித்து வரி செலுத்தி இருந்தாலும் அது போக மேற்சொன்ன தொகையையும் கட்ட வேண்டும் த எட்ஜ் மார்க்கெட்ஸ் கூறியது.

அதற்கான கடிதமொன்று ஒரு வாரத்துக்குமுன் நஜிப்புக்கு அனுப்பட்டு விட்டதாக ஒரு வட்டாரம் அந்த நாளேட்டிடம் தெரிவித்துள்ளது.

ஐஆர்பி ஆய்வாளர்கள், குறிப்பிட்ட காலப் பகுதியில் வருமானமாக பெற்ற ரிம4 பில்லியன் குறித்து நஜிப் அறிவிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். இதில் உள்நாட்டு மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் 1எம்டிபி-இலிருந்து வந்ததாகக் கூறும் ரிம2.6 பில்லியனும் அடங்கும்.

அது சவூதி அராபியா அரசாங்கத்திடமிருந்து கிடைத்த நன்கொடை என்று நஜிப் தொடர்ந்து கூறிவருகிறார்.

அப்பணம் கொள்ளையடிக்கப்பட்டதோ நன்கொடையாக வந்ததோ எப்படி இருந்தாலும் வரிவிதிப்புக்கு உள்பட்டதே என்று வருமான வரி நிபுணர் ஒருவர் குறிப்பிட்டதாக அந்த நாளேடு கூறுகிறது.

“அது சட்டவிரோதமான முறையில் வந்த பணமாக இருக்குமானால் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்ய வேண்டியது எம்ஏசிசி அல்லது போலீஸ் போன்ற அமைப்புகளின் பொறுப்பு.

“ஐஆர்பியைப் பொறுத்தவரை அது வருமான வரிக்கு உள்பட்டதுதான்”, என்றவர் சொன்னாராம்.