நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிகளுக்காகக் கொடுக்கப்படும் மான்யமான ரிம100,000 பக்கத்தான் ஹரப்பான் எம்பிகளுக்குக் கொடுக்கப்படும் மான்யத்தில் பத்தில் ஒரு பங்குக்கூட இல்லை எனக் குறைப்பட்டுக் கொண்டனர்.
இவ்வாண்டில் ஹரப்பான் எம்பிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரிம1.5 மில்லியன். அத்தொகை கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டதைக் காட்டிலும் மும்மடங்கு அதிகம்.
இதை ஷஹிடான் காசிம் (பிஎன் -ஆராவ்) நேற்று பிரதமர்துறை துணை அமைச்சர் முகம்மட் பாரிட் முகம்மட் ரபிக்கிடம் சுட்டிக்காட்டினார்.
“டிஏபிகூட ஒரு முறை எல்லா எம்பிகளுக்கும் ஒரே மாதிரி ஒதுக்கீடுகள்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது, (அரசாங்கமும்) அதற்கு ஒத்துக்கொண்டது”, என்றவர் கூறினார்.
அரச உரைமீதான விவாதங்களை முடித்து வைத்துப் பேசிய பரிட்டும் எதிரணி எம்பிகளுக்கும் அரசாங்க எம்பிகளுக்கும் கொடுக்கப்படும் மான்யத்தில் பாகுபாடு உள்ளதை ஒப்புக்கொண்டார்.
“அமைச்சுகளுக்கும் துறைகளுக்கும் கொடுக்கப்படுவது போக இது ஒரு உபரி ஒதுக்கீடுதான். பிரதமரால் கொடுக்கப்படும் இந்தச் சிறப்பு மான்யத்துடன் கூடுதல் ஒதுக்கீடு பெற எங்கு எப்படி மனுச் செய்வது என்பது அனுபவம் வாய்ந்த எம்பிகளுக்குத் தெரியும்”, என்றாரவர்.
நிதி ஒதுக்கீடு கேட்டு எம்பிகளிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஹரப்பான் அரசாங்கம் நிராகரித்ததில்லை என்று கூறிய அவர், கொடுக்கப்படும் பணம் மக்களுக்காகச் செலவிடப்பட வேண்டும், அதுதான் முக்கியம் என்றார்.
”கொடுக்கப்படும் பணத்தை மக்களுக்காக பயன்படுத்திக்கொள்வது என்பதை எம்பிகளின் முடிவுக்கே விட்டு விடுகிறோம், என்றார்.
அப்போது எதிரணித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் எழுந்து நின்று எதிர்க்கட்சி எம்பிகளுக்கு மான்யம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆனால், கொடுக்கப்படும் தொகைதான் சரியில்லை என்றார்.
“குறைவான ஒதுக்கீடு எதிரணியினர் வென்ற தொகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி”, என்றவர் குறிப்பிட்டார்.
அதற்கு, சான் மிங் காய் (ஹர்ப்பான் -அலோர் ஸ்டார்) பிஎன் ஆட்சியில் இருந்தால் எதிரணியினருக்கு இப்படி ஒரு ஒதுக்கீட்டைக் கொடுக்க முன்வந்திருக்குமா என்று வினவினார்.
பிஎன் ஆட்சியில் எதிரணி எம்பிகளுக்கு எந்த ஒதுக்கீடும் கொடுக்கப்பட்டதில்லை என்றாரவர்.