கையூட்டு பெற்ற அமைச்சரின் உதவியாளருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல்

மேம்பாட்டாளர் ஒருவரிடமிருந்து ரிம28,000 மதிப்புள்ள கடிகாரத்தைக் கையூட்டாகப் பெற்றார் எனும் சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த்தால் கைது செய்யப்பட்ட விவசாயம், விவசாயம் சார்ந்த அமைச்சர் சலாஹுடின் ஆயுப்பின் உதவியாளர் நான்கு நாள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அமைச்சர் சலாஹுடின் எம்ஏசிசி-இல் தலையிடப்போவதில்லை என்று உறுதி கூறினார்.

“எஏசிசி நியாயமாகவும் சுதந்திரமாகவும் விசாரணை செய்யும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு”, என்றவர் நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

முன்னதாக, 47 வயதான அந்த உதவியாளர் புத்ராஜெயாவில் , மாலை மணி 5 அளவில் புத்ரா ஜெயாவில் எம்ஏசிசி தலைமையகம் சென்றபோது கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சின் திட்டங்களை, மேம்பாட்டு நிறுவனத்துக்குப் பெற்றுத் தர உதவுவதற்காக அந்நிறுவனத்திடமிருந்து அவர் கையூட்டு பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.