அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், ரந்தாவ் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தன் சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக இருந்தபோதே, மாநில அரசின் கொள்கைக்கேற்ப தன் சொத்து விவரத்தை அறிவித்திருப்பதாக அவர் சொன்னார்.
“மேலும், இப்போது என் சொத்துகள் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகின்றன. சட்டமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதியம் தவிர வேறு வருமானம் இல்லை என்பதால் செலவுகளைச் சமாளிக்க ஒரு வீட்டையும் காரையும் விற்க வேண்டியதாயிற்று”, என்று இன்று ரந்தாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், முகம்மட் அவரின் சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும் அப்போதுதான் அதை இப்போதைய மந்திரி புசார் அமினுடின் ஹருனின் சொத்துகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும் என்று கூறியிருந்தார். அமினுடின் அவரது சொத்து விவரத்தை அறிவித்துள்ளார்.