கோ, அம்ரி காணாமல் போனதை விசாரிக்க சுயேச்சைப் பணிக்குழு அமைப்பீர்- சுஹாகாம்

பாதிரியார் ரேய்மண்ட் கோ, அம்ரி ச்சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்கு போலீஸ் சிறப்புப் பிரிவுதான் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ள மலேசிய மனித உரிமை ஆணையம், அவ்விருவர் காணாமல்போன விவகாரத்தைத் திரும்பவும் விசாரிக்க ஒரு சுயேச்சைப் பணிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இருவர் காணாமல்போனதுமீதான போலீஸ் விசாரணையில் பல குறைபாடுகள் காணப்படுவதாக சுஹாகாம் ஆணையர் மா வெங் குவாய் கூறினார்.

“அவர்களின் குடும்பத்தாருக்குத் தேவை விடைகள். அதை அரசாங்கத்தால்தான் கொடுக்க முடியும்.

“இதுவரை விசாரணை நடத்தியவர்களுக்கு, ஒன்று கேள்விகளுக்கு விடை அளிக்க விருப்பமில்லை அல்லது அவர்கள் காணாமால்போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நடப்பதைப் பார்க்கையில் அப்படித்தான் நினைக்க வேண்டியுள்ளது.

“அதனால், அம்ரி ச்சே மாட் காணாமல்போன விவகாரத்தை விசாரிக்க தனியே ஒரு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும்”, என்று கூறியவர் கோவுக்கும் அப்படியே செய்யப்பட வேண்டும் என்றார்.

பணிக்குழு உறுப்பினர்களைச் சட்டத்துறைத் தலைவர் டோம்மி தாமஸ் நியமிக்க வேண்டும். அவர்களுக்கான தகுதிகளையும் அது பட்டியலிட்டிருந்தது.

அவர்கள் முந்தைய விசாரணயில் தொடர்பில்லாதவர்களாகவும் போலீஸ் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுடன் தொடர்பில்லாதவர்களாகவும், பெர்லிஸ் சமயத்துறை புதிய, பழைய அதிகாரிகளுடன் எந்தத் தொடர்பு அற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.