வெளிநாட்டு நன்கொடைக்கு வரி இல்லையா? சட்டம் அப்படிக் கூறவில்லை-நிபுணர்

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக எந்தச் சட்டமும் கூறவில்லை என்கிறார் வரி நிபுணர் வீரேந்தர்ஜிட் சிங்.

ஒரே ஒரு நன்கொடைக்கு மட்டும் வரிவிலக்கு உண்டு. பெற்றோரிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் பெறப்படும் நன்கொடைக்கு. அது சேவைக்காகக் கொடுக்கப்படும் சன்மானமாக அல்லாமல் பாசத்துடன் கொடுக்கப்படும் பரிசாகக் கருதப்படுகிறது.

“ஒருவருக்கு ஒரு நன்கொடை வருகிறது. அது பெற்றோரிடமிருந்தோ பிள்ளையிடமிருந்தோ வந்ததல்ல என்றால் எதற்காக உங்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ற கேள்வி எழும்”. ‘மலேசியா பாருவில் வரிச் சீரமைப்புத் திட்டம்’ என்னும் கருத்தரங்கில் கலந்துகொண்ட வீரேதர்ஜிட் சிங் இவ்வாறு கூறினார்.

பணம் ஒரு அரசியல் கட்சிக்குச் சென்றிருந்தால், அது வேறொரு கோணத்தில் பார்க்கப்படும்.

“கட்சி பணத்தைப் பெற்றிருந்தால் அது வரி விதிப்புக்கு உட்பட்டதல்ல. ஆனால், அப்பணம் சொத்துகள் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டால் வரி விதிக்கப்படும். அதே பணத்தைத் தனிப்பட்டவர் பெற்றிருந்தால் அது வேறு விசயம்”. அதன்மீது நடவடிக்கை எடுப்பதற்குமுன் நன்கொடை அளிக்கப்பட்டதன் நோக்கம் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவர் சவூதி அராபியாவிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் ரிம2.6பில்லியன் நன்கொடை உள்பட பல்வேறு வருமானங்களுக்கு ரிம1.2பில்லியன் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுவது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீரேந்தர்ஜிட் பதிலளித்தார்.