பெற்றொரில் ஒருவர் மதம் மாறும்போது பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றப்படுவதைத் தடை செய்யும் சட்ட உள்பிரிவு 88 ஏ-யை நடைமுறைப்படுத்த புத்ரா ஜெயா எண்ணங் கொண்டிருக்கவில்லை.
2018-இல் கூட்டரசு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஐந்து சிறார்கள் மதமாற்றப்பட்ட விவகாரத்தைச் செல்லாதென்று தீர்ப்பளித்திருப்பதை உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் சுட்டிக்காட்டினார்.
“சட்ட உள்பிரிவு 88ஏ-யை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அது குறித்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துடன் ஆலோசனை செய்தோம். அதில், சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் அதிகாரத்தை நீதிக்குப் பொறுப்பான நீதிமன்றங்களிடமே விட்டுவிடுவதென்று முடிவு செய்யப்பட்டது. கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு கீழ் நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்”, என முகைதின் கூறினார்.
முகைதின் நாடாளுமன்றத்தில் அஸலினா ஒஸ்மான் சைட்( பிஎன் -பெங்கெராங்)டின் கேள்விக்குப் பதிலளித்தார். அஸலினா, அரசாங்கம் சட்ட உள்பிரிவு 88ஏ குறித்து அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வின் முடிவைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.
2016-இல், முந்தைய அரசாங்கம் சட்ட உள்பிரிவு 88ஏ-யைச் சீரமைப்புச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பியது. ஆனால், எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அது நீக்கப்பட்டது.
சட்ட உள்பிரிவு 88ஏ, திருமணத்தின் விளையாக உருவான பிள்ளை “மதமாற்றத்துக்குமுன் அதன் பெற்றோர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களோ அச்சமயத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்கும் ” என்று கூறியது.