நஜிப்: நான் கொள்ளைக்காரன் என்றால், பெட்ரோனாஸ்சில் எப்படி RM174b பணம் உள்ளது?

ரந்தாவ் இடைத்தேர்தல் | தன்னைக் கொள்ளைக்காரன் என்று குற்றஞ்சாட்டியவர்களின் வாயை அடைக்க, தனது நிர்வாகம் விட்டுச்சென்ற பெட்ரோனாஸ் பண இருப்பை முன்னாள் பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

“நான் கொள்ளைக்காரன் என்றால், பெட்ரோனாஸ்சின் ரொக்கம் எப்படி RM174 பில்லியன் இருக்கும்,” என்று அவர், நேற்றிரவு சென்டாயான், நெகிரி செம்பிலானில் நடந்த செராமாவில் கூறினார்.

தற்போது நஜிப், பணமோசடி, குற்றவியல் மீறல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 42 கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கிறார்.

அவற்றுள், எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட ஏழு விசாரணைகள், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

நேற்றிரவு, சுமார் 250 பேர் கலந்து கொண்ட செராமாவில், நஜிப் தனது விசாரணை பற்றி பேசவில்லை. மாறாக, பிஎச் அரசாங்கத்தை விமர்சிப்பதிலேயே அவரின் கவனம் இருந்தது, பெட்ரோனாசில் இருந்து பிச் அரசாங்கம் RM82 பில்லியனை எடுத்துகொண்டது என்றும் அவர் சொன்னார்.

அரசாங்கத்திற்கு வழங்கும் வருடாந்த ஈவுத்தொகையில், கூடுதலாக RM30 பில்லியன் சிறப்பு ஈவுத்தொகையைப் பெட்ரோனாஸ் இவ்வாண்டு வழங்கவுள்ளது. RM37 பில்லியன் ஜி.எஸ்.டி.-ஐ திருப்பிச் செலுத்தவுள்ள அரசாங்கத்தின் சுமையை எளிமையாக்குவதே இதன் நோக்கம்.

கடந்தாண்டு, பெட்ரோனாசில் இருந்து “RM17 பில்லியன்” (உண்மையில் RM19 பில்லியன்) ஈவுத்தொகை மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் நஜிப் கூறினார்.