கிளந்தானில் மாநில, மத்திய அரசாங்க அலுவலங்களில் பேரரசர் சுல்தான் அப்துல்லா அஹமட் ஷா, பேரரசியார் துங்கு அமினா மைமுனா இஸ்கண்டரியா ஆகியோரின் படங்களையும் வைப்பதற்கு மாநில அரசு இப்போது அனுமதி அளிக்கிறது.
மாநில துணைச் செயலாளர்(நிர்வாகம்) அட்னான் உசேன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதைக் குறிப்பிட்டதாக மலாய்மொழி நாளிதழான சினார் ஹரியான் கூறியது.
“இதன்வழி கிளந்தான் மாநிலச் செயலாளரின் 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது அறிக்கையில் திருத்தம் செய்யப்படுகிறது.
“பட்டியலில் உள்ள படங்களை மட்டுமே கிளந்தானில் உள்ள மாநில, மத்திய அரசாங்க அலுவலகங்களில் வைக்க முடியும்”, என்று அந்த அறிக்கை கூறிற்று.
முன்பு அரசு அலுவலகங்களில் நான்கு படங்கள் மட்டுமே- கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மட், பட்டத்திளவரசர் தெங்கு முகம்மட் ஃபைஸ் பெட்ரா, முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா, மந்திரி புசார் அகமட் யாக்கூப் ஆகியோரின் படங்கள் மட்டுமே- இருக்கலாம் என்ற விதி கிளந்தானில் இருந்தது. இப்போது அந்தப் பட்டியலில் பேரரசர், பேரரசியார் படங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால். அதில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.