சுங்கை பூலோவுக்குப் புதிதாக ஒருவர் போகப் போகிறார்- அன்வார் கிண்டல்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், சுங்கை பூலோ சிறைச் சாலைக்குப் புதிதாக ஒருவர் விரைவில் போகக் கூடும் எனக் கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை மனத்தில் வைத்துப் பேசிய அன்வார், சுங்கை போலோ சிறையில் தாம் முன்பு இருந்த அறை இன்னும் காலியாகத்தான் உள்ளது என்றார்.

“சுங்கை பூலோ சிறை அதிகாரிகள் 250 பேருக்கு என் வீட்டில் விருந்தளித்த போது நான் இருந்த அறை இன்னும் காலியாக உள்ளதா என்று விசாரித்தேன். ஆமாம் என்றார்கள்.

“அதைச் சுத்தப்படுத்தி வைக்கச் சொன்னேன். ஏனென்றால் விரைவில் ஒருவர் அங்கு செல்லக்கூடும்”., என்று அன்வார் கூறியதும் கூட்டத்தினர் “ஆமாம், போஸ்கூ”, என்று முழக்கமிட்டனர்.

அன்வார் நேற்றிரவு ரந்தாவில் லின்சம் கம்போங் பாசிரில் இடைத் தேர்தலுக்காக பரப்புரை செய்தார்.

அன்வார் முன்பு குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சுங்கை பூலோவுக்குத்தான் அனுப்பப்பட்டார். அது அரசியல் நோக்குடன் தொடுக்கப்பட்ட வழக்கு என்றுதான் அவர் இன்னமும் கூறி வருகிறார்.

மூன்றாண்டுகள் சிறையில் இருந்த அவர், பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததும் அரச மன்னிப்பு பெற்று விடுதலையானார்.

இப்போது போர்ட் டிக்சன் எம்பியான அன்வார், நஜிப்பின் கதிதான் அம்னோவின் மற்ற தலைவர்களுக்கும் என்றார்.

“இனி (ஹரப்பானை) வெல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதன் (அம்னோவின்) தலைவர்கள் சிறை போவதற்கு வரிசைபிடித்து நிற்கிறார்கள்.

“அவர்கள் எங்கே போவார்கள்?”, என்றவர் வினவியதும் கூட்டத்தினர் “சுங்கை பூலோவுக்கு”, என்று கூவினர்.