ஐஜிபி உடனடியாக நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை அமைப்பு கோரிக்கை

மனித உரிமைக்காகப் போராடும் அமைப்பான சுவாரா ரக்யாட் மலேசியா(சுவாராம்) , பாதிரியார் ரேய்மண்ட் கோ, சமூக ஆரவலர் அம்ரி ச்சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்குப் போலீசார்தான் காரணம் என்று கூறப்பட்டிருப்பதால் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகம்மட் ஃபூசி ஹருன் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்விருவர் காணாமல்போன விவகாரத்தை ஆராய ஒரு புதிய விசாரணைக் குழு அமைக்கப்படும், அதுவும் ஃபூசி அடுத்த மாதம் பணி ஓய்வு பெற்ற பின்னர் அமைக்கப்படும் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து சுவாராம் இவ்வாறு கேட்டுக்கொண்டது.

பணி ஓய்வுவரை ஃபூசி போலீஸ் படைத் தலைவராக இருப்பார் என்பதை ஏற்க இயலாது என்று சுவாராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி ஓர் அறிக்கையில் கூறினார்.

“போலீசுக்கு எதிராக, அதுவும் அதன் சிறப்புப் பிரிவுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வேளையில், அப்போது சிறப்புப் பிரிவின் தலைவராக இருந்ந்த ஒருவர் தொடர்ந்து போலீசில் இருக்கக் கூடாது.

“ஐஜிபியை இடைநீக்கம் செய்வதைத் தாமதப்படுத்துவது சட்ட ஆளுமையை அவமதிப்பதாகவும் போலீசின் பெயரைக் கெடுப்பதாகவும் அமையும்”, என்றாரவர்.