ஆட்சியாளர்களுடன் மோதல் வேண்டாம் என்பதற்காகவே புத்ரா ஜெயா ரோம் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியதாக அன்வார் இப்ராகிம் கூறினார்.
நேற்றிரவு ரந்தாவில் ஒரு செராமாவில் கலந்துகொண்டு பேசிய பிகேஆர் தலைவர், அந்த ஒப்பந்தத்தை ஏற்பதால் ஆட்சியாளர்களின் அதிகாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது, இதைச் சட்டத்துறைத் தலைவரும் விளக்கியுள்ளார் என்றார்.
“ஆனால், ஆட்சியாளர்கள் அவர்களின் அதிகாரம் பாதிக்கப்படலாம் என்று கவலைப்படுகிறார்கள்.
“அப்படி ஒரு கருத்துத் தொடர்வதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் விரும்பவில்லை அதனால்தான் (ஒப்பந்தத்திலிருந்து) பின்வாங்கினார். இதை நேற்று பிரதமரே என்னிடம் தெரிவித்தார்”, என அன்வார் கூறினார்.
புதன்கிழமை மகாதிர் மலேசியா ரோம் ஒப்ப்ந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதற்கான காரணத்தை விவரித்த அவர், அந்த ஒப்பந்தம் நல்ல ஒப்பந்தமல்ல என்பதால் வெளியேறவில்லை என்றும் “மக்களை விருப்பம்போல் அடிக்கவும் உதைக்கவும் உரிமை வேண்டும் என்று நினைக்கும் ஒரு குறிப்பிட்ட மனிதர்” ஏற்படுத்திய குழப்பநிலையைத் தவிர்க்கவே அதிலிருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.