ரிம10 மில்லியன் பணம் அனுப்பியதில் குற்றம் ஏதும் செய்யவில்லை- மாட் ஹசான்

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஹசான், 2008 -இல் நாணயமாற்று வணிகர் மூலமாக ரிம10 மில்லியனை லண்டனுக்கு அனுப்பியதில் குற்றம் ஏதும் செய்யவில்லை என்கிறார்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தலைவர் சுல்கிப்ளி முகம்மட் விரும்பினால் இந்த விவகாரத்தை மீண்டும் எம்ஏசிசி-இன் கவனத்துக்குத் தாராளமாகக் கொண்டு செல்லலாம் என்றும் முகம்மட் கூறினார்.

“இதை எம்ஏசிசி ஏற்கனவே விசாரணை செய்தது.

“நான் குற்றம் இழைக்கவில்லை என்பது அவர்களின் முடிவு. பணத்தை ஒரு நாணயமாற்று வணிகர் மூலமாக அனுப்பினேன், அவ்வளவுதான்.

“அதில் அதிகாரமீறல் இல்லை, நான் தவறாக எதையும் செய்யவில்லை. லண்டனில் ஒரு அடுக்ககம் வாங்கினேன்”, என்று ரந்தாவ் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளரான முகம்மட் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

நேற்றிரவு செராமா ஒன்றில் பேசிய சுல்கிப்ளி, ரிம10 மில்லியனை நாணயமாற்று வணிகர் மூலமாக லண்டனுக்கு அனுப்பியதன்வழி முகம்மட் வங்கிச் சட்டங்களை மீறினார் எனக் கூறி அவர்மீது எம்ஏசிசி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வினவினார்.

அப்போதைய பிஎன் அரசாங்கத்தில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முகம்மட்மீது நடவடிக்கை எடுக்கவில்லை, மாறாக, நாணயமாற்று வணிகர்மீதுதான் நடவடிக்கை எடுத்தது.