கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஊழலை 90விழுக்காடு குறைத்துள்ளது எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
நியு ஸ்ரேட்ஸ் டைம்சுக்கு (என்எஸ்டி) வழங்கிய சிறப்பு நேர்காணலில் இதைத் தெரிவித்த மகாதிர், முந்தைய அரசாங்கத்தின் கேள்விக்கிடமான பல நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் “முடிவின்றி” தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன என்றார்.
“முன்பு என்னுடைய நிர்வாகத்தில் இருந்தபோது ஊழல் அவ்வளவு மோசமல்ல. எல்லாவற்றையும் கட்ட முடிந்தது மக்களும் எங்களை நம்பினார்கள்.
“ஆனால், நஜிப் (அப்துல் ரசாக்) ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் படுமோசமாக விரிவடைந்தது . அரசாங்கத் தலைவர் ஊழல்வாதி என்பது வெளிப்படையாக தெரியவந்ததும் மொத்த அரசாங்க இயந்திரமும் ஊழல் மயமானது. நஜிப் காலத்தில் ஊழல் பயங்கரமாக தாண்டவமாடியது”, என்று மகாதிர் குறிப்பிட்டார்.
அது எல்லாம் கடந்த ஆண்டு மே 9-இல் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததும் நின்று போனது. இப்போது ஊழல் சம்பவங்கள் நடப்பது “மிகவும் குறைவு” என்றார்.