நாளை, ஜொகூர் எம்பி மகாதீரைச் சந்திக்கிறார்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின், ரோம் சட்டத்தில், புத்ராஜெயா சேரத் தவறியதால் வளர்ந்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு இடையில், ஜொகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சப்பியன் நாளை பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைச் சந்திக்க உள்ளார்.

ஒஸ்மானை, டாக்டர் மகாதிர் ஒரு கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார், அக்கூட்டம் பெர்டானா புத்ராவில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியாகினிக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன,

இருப்பினும், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவரங்கள் என்னவென்று வெளியிடப்படவில்லை.

ஜொகூர் அரசாங்கத்தில் மறுசீரமைப்பு விரைவில் நடைபெறும் என்று நம்பப்படுகிறது, ஆனால், கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்படுமா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை.

மந்திரி பெசார் ஓஸ்மானின் பதவிக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் வெளியாகியுள்ள போதும், ஜொகூர் மாநில அரசியலை நன்கு அறிந்த வேறு சில ஆதாரங்கள், சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கும் வதந்திகளைத் தவிர, வேறு எதுவும் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

அதேசமயம், ஜொகூர் அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றி வெளியில் விவாதிக்கக்கூடாது என்று சில தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக உள்ளூர் அரசியல் தலைவர்கள் கூறினர்.