அமைச்சர் மகன்மீது விரைவில் போதைப் பொருள் குற்றச்சாட்டு

போதைப் பொருள் உட்கொண்ட குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட அமைச்சர் ஒருவரின் மகன் விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார்.

போலீசார் விசாரணை அறிக்கையைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

“அமைச்சரின் மகனை நீதிமன்றத்தில் நிறுத்த அங்கிருந்து உத்தரவு வந்துள்ளது”, என முகைதின் பிஎன் லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல் அனுவார் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

ஆனால், முகைதின் அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

ஜனவரி 5-இல், தலைநகரில் ஜாலான் அம்பாங்கில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபுவின் மகன் கஞ்சா உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

அப்போது முகம்மட், தம் 31-வயது மகன் விவகாரத்தில் நாட்டின் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்படும் என்றார்.