ஐ.பி.சி.எம்.சி.-யை விரைவில் அமைக்க வேண்டும், போலிஸ் காவலில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வலியுறுத்து

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, சுதந்திரமான புகார் மற்றும் போலிஸ் துர்நடத்தை ஆணைக்குழுவை (ஐ.பி.சி.எம்.சி.), உடனடியாக அமைக்க வேண்டும் என ஐ.பி.சி.எம்.சி.-யை நிறைவேற்றக் கோரும் கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியது.

பாஸ்தர் ரேமண்ட் கோ மற்றும் அம்ரி சே மாட் காணாமற் போனதைப் பற்றி மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகம்) வெளிப்படையான அறிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்தச் சுயாதீன ஆணைக்குழு அமைப்பதைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் என அக்கூட்டணியின் தலைவர், எம் வி நந்தன் கூறினார்.

“ஐ.பி.சி.எம்.சி.-யை அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை, 2005-ஆம் ஆண்டிலிருந்து முன்மொழியப்பட்டு வருகிறது, ஆனால் காவற்துறையினரின் எதிர்ப்புகள் காரணமாக அது இன்னும் நிறுவப்படவில்லை.

“ஐ.பி.சி.எம்.சி. நடைமுறைப்படுத்தப்பட்டால், கைதிகளைச் சித்திரவதை செய்தல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகச் செயல்கள் குறைக்கப்படும் அல்லது இல்லாமல் ஒழியும் ஐ.சி.சி.எம்.சி,” என அவர் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

போலிஸ் காவலில் இறந்தவர்களின் பிரதிநிதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்,  அரசாங்கப் பிரதிநிதிகளிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர்.

அரசாங்கப் பிரதிநிதிகளாக, பெட்டாலிங் ஜெயா எம்பி, மரியா சின் அப்துல்லா, நிபோங் தெபால் எம்பி, மன்சோர் ஒத்மான் மற்றும் தஞ்சோங் மாலிம் எம்பி, ச்சாங் லி காங் ஆகியோர் வந்திருந்தனர்.

கே கலாவாணி, வி சாந்தி மற்றும் அலி அமீர் பாஷா போன்று, போலிஸ் காவலில் இறந்தோரின் குடும்ப உறுப்பினர்களும் அங்கு வந்திருந்தனர்.

அவர்கள் கோலாலம்பூர், பாடாங் மெர்பொக்கில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அணிவகுத்து வந்தனர்.

முன்னதாக, அக்டோபர் 2017-ல், ஃபாதர் கோ மற்றும் சமூக ஆர்வலர் அம்ரி காணமல் போனதற்கு, காவற்துறையின் சிறப்புப் பிரிவு படையே (எஸ்.பி.) பொறுப்பு என்று சுஹாகாம் ஒரு பொது விசாரணை அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அரசு தரப்பைச் சார்ந்த, குறிப்பாக புக்கிட் அமான் போலிஸ் சிறப்புப் பிரிவின் தலையீடு அதில் உள்ளது என்று சுஹாகாம் கூறியிருந்தது.

காவல்துறையின் முன்னாள் தலைவர், காலிட் அபு பாக்கர் உட்பட, மொத்தம் 16 பேர் விசாரணையில் சாட்சியம் அளித்தனர். இதன் காரணமாகவே, ஐ.பி.சி.எம்.சி. அமைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்தபடி ஐ.பி.சி.எம்.சி.-யை உடனடியாக அமல்படுத்த நந்தன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.