மந்திரி புசாரைத் தேர்ந்தெடுப்பது வெற்றிபெறும் கட்சிதானே தவிர, சுல்தான் அல்ல- பிரதமர் வலியுறுத்து

ஜோகூரின் புதிய மந்திரி புசாரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெர்சத்து கட்சிக்குத்தான் உண்டு ஜோகூர் அரண்மனைக்கு அல்ல என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார்.

“இது அரசியல் விவகாரம். இதில் சுல்தானுக்கு வேலை இல்லை

“தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அந்தக் கட்சிதான் அதுதான் அதை(அடுத்த மந்திரி புசார் யார் என்பதை)த் தீர்மானிக்கிறது”, என்றவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிய மந்திரி புசாரைத் தேர்ந்தெடுக்கப் போவது அவரா அல்லது ஜோகூர் சுல்தானா என்று கேட்கப்பட்டதற்கு மகாதிர் அவ்வாறு பதிலளித்தார்.

நேற்று, ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், மந்திரி புசாரை நியமிப்பது சுல்தானின் தனியுரிமை என்று கூறியிருந்தார். பெர்சத்துக் கட்சியின் ஒஸ்மான் சாபியான் விலகிக் கொண்டதை அடுத்து அப்பதவி காலியாகவுள்ளது.

மந்திரி புசாரை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தவர் சுல்தான் இப்ராகிம்தான் என்றும் துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டிருந்தார்.

“சுல்தான் பல மாதங்களுக்கு முன்பே மந்திரி புசாரை மாற்ற முடிவு செய்து விட்டார். மந்திரி புசாரைத் தேர்ந்தெடுப்பது சுல்தானின் தனியுரிமை என்பதை மறக்க வேண்டாம்”, என்றவர் கூறினார்.

ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஷாருடின் ஜமால்- இவர் பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்தவருமாவார் -அடுத்த மந்திரி புசாராகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

அது குறித்து மகாதிரைக் கேட்டதற்கு “எனக்குத் தெரியாது” என்றார்.

நேற்று ஒஸ்மான் பதவி விலகியதை உறுதிப்படுத்திய மகாதிர் அப்பதவிக்கு மூன்று, நான்கு பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கூறினார்.