ஜோகூரின் புதிய மந்திரி புசார் பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று ஜோகூர் பக்கத்தான் ஹரப்பானின் நான்கு பங்காளிக் கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.
கோலாலும்பூரில் பெர்சத்துத் தலைவர் முகைதின் யாசின் வீட்டில் நடந்த கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
அது ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு எனத் தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
“மந்திரி புசாரின் பதவி விலகல் கடிதத்துக்கு சுல்தான் இன்னும் மறுமொழி அளிக்கவில்லை. வெளிநாடு சென்றுள்ள சுல்தான் திரும்புவதற்குக் காத்திருக்கிறோம்”, என்று அவ்வட்டாரம் மேலும் கூறிற்று.
ஜோகூர் ஹரப்பான், மந்திரி புசாராக நியமிக்கப்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரைத் தேர்ந்தெடுத்தது.
டாக்டர் ஷாருடின் ஜமால்(புக்கிட் கெப்போங்),
மஸ்லான் பூஜாங் (புத்ரி வங்சா),
முகம்மட் இஸ்ஹார் அகமட் (லார்கின்),
முகம்மட் சொலிஹான் பத்ரி( தெனாங்).
இந்த நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஜோகூர் பெர்சத்து தொகுதித் தலைவர்கள் கட்சித் தலைவர்களுடன் இன்று பிற்பகல் கூட்டம் நடத்துகிறார்கள்.
நடப்பு மந்திரி புசார் ஒஸ்மான் சாபியான் தம் பதவி விலகல் கடிதத்தைக் கடந்த வாரமே ஜோகூர் அரண்மனையில் கொடுத்து விட்டார்.
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் சனிக்கிழமை ஒஸ்மானுக்குப் பேட்டி அளிப்பார் எனத் தெரிகிறது.
ஒஸ்மான் பதவி விலகலுக்கான காரணத்தை இன்னும் தெரிவிக்கவில்லை.
ஆட்சியாளரைச் சந்தித்துப் பேசிய பின்னரே அதை வெளியிட முடியும் என்றாரவர்.