பெங்கேராங் வெடிப்பில் 10க்கு மேற்பட்ட வீடுகளுக்குச் சேதம்

பெங்கேராங்கில் பெட்ரோனாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிகழ்ந்த வெடிப்பில் பெங்கேராங் கோத்தா திங்கி அருகில் உள்ள கம்போங் லெபாவில் பத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

அப்ட் ரகிம் சனூசி,85, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகவும் அதிர்வெடிப்பைக் கேட்டு விழித்துக் கொண்டதாகவும் கூறினார்.

“அண்மையில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். வெடிப்பைக் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தேன். என் வீட்டுக் கூரையின் பெரும்பகுதி இடிந்து விழுந்திருந்தது”, என்றவர் இன்று கோத்தா திங்கியில் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

வீட்டின் சுவர்களில் விரிசல்கள் காணப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இன்னொருவர், அப்துல் ஹாலிம் முகம்மட், 52, இரவு 1.30 அளவில் படுக்கச் சென்றதாகவும் அப்போது குண்டு வெடித்ததுபோன்ற பேரொலி கேட்டதாகவும் கூறினார்.

“கண்ணாடி நொறுங்கும் ஒலி கேட்டது. வெளியில் சென்று பார்த்தேன். வீட்டின் கண்ணாடிக் கதவு வெடிப்பின் விளைவாக நொறுங்கிக் கிடந்தது”, என்றார். அவர் வீட்டின் சுவர்களிலும் விரிசல்கள் விழுந்திருந்தன.

வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக காலை மணி 10வரை பத்துக்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்தன.

கம்போங் லெபாவ், வெடிப்பு நிகழ்ந்த ஆலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

-பெர்னாமா