அடுத்த வாரம் யுனிவர்சிடி உத்தாரா மலேசியா (யுயுஎம்)வில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் பரப்பாளர் ஜாகிர் நாய்க் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொள்ள மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுத்தவில்லை என அப்பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 18-இல் நடைபெறும் அந்நிகழ்வுக்கு மாணவர் விவகாரத் துறையின்கீழுள்ள கிளப் பெர்கிம் ஏற்பாடு செய்திருப்பதாக யுயுஎம் துணை உதவி வேந்தர் இணைப் பேராசிரியர் ஹெண்ட்ரிக் லம்சாலி கூறினார்.
‘நிபுணரான ஒரு முஸ்லிமின் கடமை: ஜாகிர் நாய்க்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்நிகழ்வு ஒரு கல்விசார் கலந்துரையாடல் என்றாரவர்.
“வருங்காலத்தில் நிர்வாகிகளாகவும் நிபுணர்களாகவும் விளங்கப்போகும் யுயுஎம் மாணவர்களை சமூக, நடப்புகளுக்கும் நடப்புப் பிரச்னைகளுக்கும் அறிமுகப்படுத்துதான் அந்நிகழ்வின் நோக்கம்.
“கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழகம் மாணவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்துகொள்ளலாம்”, என ஹெண்ட்ரிக் ஓர் அறிக்கையில் கூறினார்.