காலை மணி 9 வரை, 13 விழுக்காட்டினர் வாக்களிப்பு, இசி மதிப்பீடு

ரந்தாவ் இடைத்தேர்தல் | இன்று, ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்கள், தங்கள் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

நான்கு முனை போட்டியைச் சந்திக்கும் இந்த இடைத்தேர்தலில், பிஎன் சார்பாக முகமட் ஹசான், பிஎச் சார்பாக டாக்டர் எஸ் ஶ்ரீ ராம், சுயேட்சை வேட்பாளர்களாக ஆர் மலர் மற்றும் முகமட் நோர் யாசின் ஆகியோரும் களமிறங்கியுள்ளனர்.

இன்று, 20,804 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 26 விழுக்காட்டினர் இந்தியர்கள் மற்றும் 18 விழுக்காட்டினர் சீனர்கள்.

காலை மணி 9 வரை, 13 விழுக்காட்டினர் வாக்களித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் (இசி) மதிப்பிட்டுள்ளது.

வாக்களிக்க வந்தவர்களுல் ஒருவரான, சுவா சென் ஹோ, 67, இந்த இடைத்தேர்தலில் முகமட் ஹசான் வெற்றி பெறுவார் என நம்புவதாகத் தெரிவித்தார்.

“இந்தக் கம்பத்தில் அனைவரும் ஹசானை ஆதரிக்கிறோம். இளைஞர்கள் மட்டுமே ஹராப்பானை ஆதரிக்கின்றனர்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

காலை மணி 6.40 அளவில், ஆர் மலர் தான் வாக்களிக்க இருக்கும், சுங் ஹுவா சீனப்பள்ளிக்கு வந்தார். 25 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த மலர், தான் முதன்முதலாக மலேசியாவில் வாக்களிப்பதாகத் தெரிவித்தார்.

காலை 8.30 மணியளவில் முகமட் ஹசானும், அதே வாக்களிப்பு மையத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன், உடல்நலம் குன்றியிருக்கும் அவரது அண்ணனும் வாக்களிக்க வந்திருந்தார்.

காலை மணி 8.50 அளவில், பிஎச் வேட்பாளர் டாக்டர் எஸ் ஶ்ரீ ராம், வாக்களிப்பதற்காக, ரந்தாவ் தமிழ்ப்பள்ளிக்கு வந்தார். இம்முறை தான் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாக, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இன்று எனது 34-வது திருமண நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தச் சட்டமன்றத் தொகுதியை வென்றெடுக்க, இறைவன் நமக்கு அருள்புரிவார்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.