ஜொகூரின் புதிய மந்திரி பெசாராக ஷாருட்டின் பதவி ஏற்பு

ஜொகூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக, புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் ஷாருட்டின் ஜமால் பதவி ஏற்றார். இந்தப் பதவி ஏற்பு வைபவம், ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் முன்னிலையில், இன்று காலை நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி, மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகிய ஒஸ்மான் சப்பியானுக்குப் பதிலாக, ஜொகூரின் 17-வது மந்திரி பெசாராக, சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் விவசாயத் துறை ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த ஷாருட்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில், புக்கிட் ஷெரின் அரண்மனையில், சுல்தான் இப்ராஹிம், ஷாருட்டினை மந்திரி பெசாராக அதிகாராப்பூர்வமாக அறிவித்து, பதவி நியமனக் கடிதத்தை வழங்கினார்.

ஷாருட்டின், 43, பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர். சற்றுமுன்னர், ஜொகூர், கெம்பாசில் உள்ள பக்காத்தான் ஹராப்பான் அலுவலகத்தில், மந்திரி பெசாராக, தனது முதல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஷாருட்டின் நடத்தினார்.

இதற்கிடையே, புதிய மந்திரி பெசார் நேர்மை, உண்மை, நம்பிக்கை கொண்டவராக இருப்பதோடு, அரசியல் மற்றும் சுய நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்; ஜொகூர் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பார் என்று நம்புவதாக சுல்தான் இப்ராஹிம் தனது உரையில் தெரிவித்தார்.

“அதுமட்டுமின்றி, நீர்வளங்களை எப்போதும் சுத்தமாகவும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்யவும், நீர்வளங்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்,” என சுல்தான் கூறினார்.