இந்தியர் ஆதரவு சரிவதைத் தடுக்க வேண்டும்- டிஏபி எம்பி கோரிக்கை

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்கத்தான் ஹரப்பானுக்கு இந்தியர் ஆதரவு சரிவு கண்ட வருகிறது, அச்சரிவைத் தடுத்து நிறுத்த வேண்டும். டிஏபி துணைத் தலைமைச் செயலாளரும் பத்து காஜா எம்பியுமான வி.சிவகுமார் ஓர் அறிக்கையில் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

14வது பொதுத் தேர்தலில் இந்திய மலேசியர்கள் பேரளவில் ஹரப்பானுக்கு ஆதரவு அளித்தார்கள், இந்திய வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் ஹரப்பானுக்குத்தான் வாக்களித்தார்கள் என்றுகூட சொல்லப்பட்டது.

ஒரு நேரத்தில் இந்தியர்கள் பிஎன்னின் வாக்கு வங்கிகளாகத்தான் இருந்தது தெரிந்ததே. அந்நிலையில் 2008-இல் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்தியர்-ஆதரவு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பக்கத்தான் ரக்யாட் கூட்டணி நோக்கித் திரும்பியது. முடிவில் அது கடந்த ஆண்டு பிஎன் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.

அப்படி மாறிய இந்தியர்கள் இன்னமும் ஹரப்பான் அரசாங்கத்துக்குத்தான் விசுவாசமாக இருக்கிறார்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

“கேமரன் மலை, செமிஞ்யி, ரந்தாவ் ஆகிய மூன்று இடைத் தேர்தல்களிலும் ஹரப்பானுக்கு இந்தியர் ஆதரவு குறைந்திருப்பது கண்கூடு.

“இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஹரப்பானைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றாலும் ஒரு சிறு எண்ணிக்கையினர் மாறியுள்ளனர்.

“இந்தியர்கள் புதிய அரசாங்கத்திடம் நிறையவே எதிர்பார்த்தார்கள். பொதுச்சேவை, வர்த்தகம், கட்டுமானம், கல்வி முதலிய துறைகளில் நிறைய வாய்ப்புகள் கிட்டும் என்று நம்பினார்கள்” என்று கூறிய சிவகுமார், அவையெல்லாம் கிடைக்கும் என்று ஹரப்பான் தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன என்றார்.

இப்போது புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 11 மாதங்கள் ஆன பின்னரும் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதால் அக்குழுவினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடு அண்மைய ரந்தாவ் இடைத்தேர்தல் தோல்வியில் தெளிவாகத் தெரிந்தது. ஹரப்பான் வேட்பாளர் தோற்றுப்போனார்.

என்றாலும், சரிந்துவரும் இந்தியர் ஆதரவைத் தடுத்து நிறுத்த காலம் கடந்துவிடவில்லை. தக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டால் அந்தச் சரிவைத் தடுக்க முடியும் என்று சிவகுமார் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இடைத் தேர்தலில் அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், ஹரப்பான் வேட்பாளர் டாக்டர் எஸ்.ஸ்ரீராமையும் மேலும் இருவரையும் தோற்கடித்து ரந்தாவ் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டார்

அத் தொகுதியில் இந்திய வாக்காளர் எண்ணிக்கை 27 விழுக்காடு.